பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு குடத்தில் வைத்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அவை அனைத்தும் உடைந்தன. இறுதியில் மஹாவிஷ்ணுவை வேண்ட, அவரும், திருச்சேறை தலத்திற்குச் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து பானை செய்யச் சொன்னார். பிரம்மனும் இத்தலத்திற்கு வந்து மண்ணை எடுத்து பானை செய்து அதில் வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாகப் புராண வரலாறு கூறுகிறது.
மூலவர் சாரநாதன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் மாமதலைப் பிரான். தாயார் சார நாயகி (சார நாச்சியார்) என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றார். சாரநாதன், சார நாயகி, சார புஷ்கரணி, சார விமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என ஐந்தும் சேர்ந்து இத்தலம் 'பஞ்சசார க்ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. பகவான் காவிரி அம்மனுக்கு பிரத்யக்ஷம்.
இக்கோயிலில் குளக்கரையில் காவிரி அம்மன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ஒரு சன்னதியில் காட்சி தருவது சிறப்பு. தைப்பூசத்தன்று நடைபெறும் திருத்தேர் உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி, மகாலஷ்மி, சாரநாயகி என்று ஐந்து தாயார்களுடன் காட்சி தருவது விசேஷம்.
திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|